மத்திய வளைகுடா நாடான ஏமன் அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 49 பேர் மாயமாகி இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கும் நிகழ்வு அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து 75 பேர் படகுகளின் மூலம் எண்ணெய் வளமிக்க அரபு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைவதற்கு வந்துள்ளனர். அவர்களது படகு ஏமன் கடல் எல்லையில் வந்து கொண்டிருந்தபோது பலத்த காற்றின் காரணமாக கவிழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஏமன் கடற்படை சம்பவ இடத்திற்கு விரைந்து இருக்கிறது.
அவர்களது மீட்பு நடவடிக்கையில் 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் எஞ்சியிருக்கும் 49 பேர் மாயமானதாக ஏமன் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்களை மீட்கும் நடவடிக்கையும் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடற்கரை பகுதிகளில் அகதிகள் படகு அடிக்கடி விபத்துக்குள்ளாவது தொடர்ந்து வருகிறது. போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் அதிக அளவிலான அகதிகள் படகுகளில் ஏறி செல்வதால் இது போன்ற விபத்து நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.