ஒன்றாக சேர்ந்து வாழ மறுத்த இளம்பெண்ணை கணவனும், அவரது தந்தையும் சேர்ந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் நேரு காலனி பகுதியில் மகாராஜன் (37) – அன்பு (32) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். மகாராஜன் – அன்பு தம்பதி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒருகட்டத்தில் தகராறு முற்றிய நிலையில், கடந்த ஆண்டு மகாராஜனுக்கும், அன்புவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் அன்பு பக்கத்து கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குக் குழந்தைகளோடு சென்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு, கணவன் மகாராஜன் நேரில் சென்று மனைவியை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், அன்பு அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த மகாராஜன் மற்றும் அவரது தந்தை சுடலைமுத்து (66) இருவரும் அன்புவின் தந்தையின் வீட்டிற்குச் சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அன்புவை அக்கமபக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். பின்னர் தாக்குதல் குறித்து அன்பு கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவர் மகாராஜன், மாமனார் சுலைமுத்து ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். ஒன்றாக சேர்ந்து வாழ மறுத்த இளம்பெண்ணை கணவனும், அவரது தந்தையும் சேர்ந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.