கடந்த 28-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த தையல்கடை காரர் கன்னையா லால் என்பவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.. முகமது நபியைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்டதற்கு பழிவாங்குவதற்காக அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக குற்றவாளிகள் வீடியோ வெளியிட்டனர்.. குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது..
இந்நிலையில் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் செய்தி பதிவிட்ட மற்றொரு நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.. மகாராஷ்டிராவில் கடந்த 21-ம் தேதி உமேஷ் பிரஹலாத்ராவ் கோல்ஹே கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். 21-ம் தேதி இரவு தனது மெடிக்கல் கடையை மூடிவிட்டு உமேஷ் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, இச்சம்பவம் நிகழ்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் தான் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் இந்த கொலை நடந்தது தெரியவந்தது..
காவல்துறையினர் இதுகுறித்து பேசிய போது “பிரஹலாத் ராவ் கோல்ஹே என்ற நபர் மகாராஷ்டிராவின் அமராவதி நகரில் மெடிக்கல் ஸ்டோரை நடத்தி வந்தார். இவர் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சில வாட்ஸ்அப் குழுக்களில் ஒரு பதிவைப் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. அவர் தனது வாடிக்கையாளர்கள் உட்பட சில முஸ்லிம்களும் உறுப்பினர்களாக இருந்த வாட்ஸ்அப் குழுவில் அந்த இடுகையை தவறாகப் பகிர்ந்துள்ளார்.. இதையடுத்து முகமது நபியை அவமதித்தவர்கள் உயிரோடு இருக்க கூடாது என்பதற்காக கொலை செய்ததாக குற்றவாளிகள் தெரிவித்தனர்….” என்று தெரிவித்துள்ளனர்..
இந்நிலையில் இந்த கொலையை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவில் “அமராவதியில் உமேஷ் கோல்ஹே காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொலையின் பின்னணியில் உள்ள சதி, அமைப்புகளின் ஈடுபாடு மற்றும் சர்வதேச தொடர்புகள் ஆகியவை முழுமையாக விசாரிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.