முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இதனால், முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் மலக்சிக்கல், மூல நோய்கல், கரப்பான், கிரந்தி, பாதவாதம், மூட்டு வலி, மூட்டு வீக்கம் போன்ற பல நோய்கள் குணமாகும். சிலருக்கு 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின் ஆரம்ப நிலை. இந்தியாவில் 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு சிறந்த நிவாரணம் முடக்கத்தான் கீரையாகும்.
இந்த கீரையைக் கொதிக்க வைப்பதால், அதில் உள்ள மருத்துவ சத்துக்கள், அழிந்து விடும். அதனால் இந்த கீரையை அரைத்து தோசை மாவில் கலந்து தோசை சுடலாம். அல்லது மிகவும் சுவையான துவையல் செய்து சாப்பிடலாம். இந்த துவையல் செய்ய, முதலில் முடக்கத்தான் கீரையை நன்கு சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி, வரமிளகாயை வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் உளுந்து சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது அதே கடாயில் முடக்கத்தான் கீரையை வதக்கி அதில் தேங்காய் துருவல், புளி சேர்த்து நன்றாக வதக்கிவிடுங்கள்.
நாம் வதக்கிய அனைத்தையும் நன்கு ஆறவைத்து விடுங்கள். பின்னர் அதில் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி துவையல் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் வழக்கம் போல் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள துவையலில் சேர்த்து விடுங்கள். இந்த துவையலை நீங்கள் சூடான சாதத்தில் கொஞ்சம் நெய்விட்டு பிசைந்தும் சாப்பிடலாம். ஒரு முறை நீங்கள் இதை சாப்பிட்டால் கட்டாயம் நீங்கள் அடிக்கடி செய்வீங்க..