சுங்கச்சாவடியை அகற்றவில்லை என்றால் உள்ளூர்வாசிகளுக்கு பாஸ் வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 14, 15ஆம் தேதிகளில் 2025 -2026 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பட்ஜெட் மீதான விவாதம் நேற்றில் இருந்து நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் சபாநாயகரை நீக்கக் கோரி அதிமுக தீர்மானம் கொண்டு வந்த நிலையில், இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியவுடன் பேரவையில் இருந்து அப்பாவு வெளியேறினார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இந்த தீர்மானம் இறுதியில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய பிரச்சனைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும் இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டுமென அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்.
இதற்கு தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார். அப்போது, கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி இரண்டு மூன்று முறை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதிவிட்டோம். சுங்கச்சாவடியை அகற்றவில்லை என்றால் உள்ளூர்வாசிகளுக்கு பாஸ் வழங்கும்படி கூறியுள்ளோம். எனவே, ஒன்றிய அரசிடம் இந்த கோரிக்கைகள் குறித்து மீண்டும் வலியுறுத்தப்படும். அதேசமயம், விதிகளை மீறி செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகளை அகற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.