தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும்போது ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதாவது, மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வுச் சட்டத்தின் எந்தவொரு நபரும், ஒப்பந்ததாரரும் அல்லது எந்தவொரு நிறுவனமும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது.
அப்படி, முதன் முறையாக மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும். இரண்டாவது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவு நீரகற்றும் சேவைகளைப் பெறுவதற்காக சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் செயலி உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் நவீன பகுதி தானியங்கி கழிவுநீர் தடை அகற்றி இயந்திரம் மூலம் கழிவுநீர் பிரதான குழாய்களில், கழிவுநீர் செல்ல தடையாக இருக்கும் கசடுகள், மரவேர்கள் மற்றும் கழிவு அடைப்புகளை நீக்குவதற்கு 8 எண்ணிக்கையிலான நவீன பகுதி தானியங்கி கழிவுநீர் தடை அகற்றும் இயந்திரம் தற்பொழுது கொள்முதல் செய்வதற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூய்மைப் பணிகள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும். உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின்றி விதிகளை மீறி தூய்மைப் பணியாளர்களை ஈடுபடுத்தும் உரிமையாளர், ஒப்பந்ததாரர், பணி அமர்த்துபவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம் மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் கழிவுநீர் அமைப்புகளை சுத்தம் செய்யும் பணிகளை முற்றிலுமாக இயந்திரங்களை கொண்டு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.