கல்வித் தொலைக்காட்சி சி.இ.ஓ. நியமன சர்ச்சை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உருக்கமாக பேசியுள்ளார்.
திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ”தமிழகத்தில் 2,381 பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறைக்கு, ரூ.1,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், நபார்டு மூலம், ரூ.800 கோடி வழங்கப்பட்டுள்ளது. அந்நிதியில், பள்ளி கட்டிடங்கள் கட்ட முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழ்நாட்டில் சுமார், 2,500 பள்ளிகளில் உரிய வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கின்றனர். எனவே, அந்த பள்ளிகளுக்கு கட்டிடம் கட்ட முக்கியத்துவம் அளிக்கப்படும்.
கல்வி தொலைக்காட்சியின் தரத்தை மேலும் உயர்த்தும் வகையில், அதற்கு சி.இ.ஓ. நியமிக்க முடிவெடுத்தோம். அதற்கு 79 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரையும் ஒரு கமிட்டியினர் தான் தேர்ந்தெடுத்தனர். தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஒரு நபரின் பின்புலம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதன் காரணமாக அவர் நியமனத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விஷயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என முதலமைச்சர் கூறியுள்ளார். அவரின் வளர்ப்பு நான். எந்த விதத்திலும் ஏமாந்து விட மாட்டேன். இவ்விவகாரம் தொடர்பாக கருத்துக்கள், ஆலோசனைகள், விமர்சனங்கள், கோரிக்கைகள் வைத்த அனைவருக்கும் நன்றி. “Resign Anbil Mahesh” என்று பதிவிட்டாலும், நீங்கள் வைக்கும் விமர்சனத்தை நேர்மறையாக தான் எடுத்து கொள்வேன்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.