சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியா ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. பாரதத்தின் பகுதியே தமிழகம். தமிழகம் பாரதத்தின் அடையாளம். உலக நாடுகளுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாதான் தலைமையாக இருக்கப்போகிறது” என்று பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்வது தான் சரி என்ற ஆளுநரின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்த சமூக வலைத்தளங்களிலும் தமிழ்நாடு என்ற ஹாஷ்டாக் இந்தியா அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அந்தவகையில் மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆளுநரின் பேச்சை கடடுமையாக் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் கலந்து கொண்ட தனது கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி ஒன்றை நேற்றைய தினம், சென்னையில் மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்தார். அப்போது பேசிய அவர், “பா.ஜ.க. மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. மத அரசியலை எதிர்ப்பதற்காகவே, காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றோம். மதத்துக்கு எதிரான அரசியலை தடுக்கவேண்டும். தேசத்தின் ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில், தேசிய ஒற்றுமை யாத்திரை அமைந்துள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.
எந்த கட்சியாக இருந்தாலும், மதத்தை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது ஏனென்றால், இது தமிழ்நாடு. அண்ணா என்பது வெறும் பெயர் மட்டும் இல்லை. அது ஒரு உறவு. நீண்ட, நெடிய பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு கிடைத்திருக்கிறது. இதை மாற்ற சொல்லுவதற்கு அவர் யார்? அவருடைய பெயரை ரவி என்பதற்கு பதிலாக புவி என மாற்றச்சொன்னால், மாற்றிக்கொள்வாரா? மதத்தை அரசியலின் கருவியாக பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அவர்களுடைய அரசியல் என்பது மதத்துக்கானது. இந்தியா சிதைந்து விடக்கூடாது என்பதற்காகவே தேச ஒற்றுமை யாத்திரை நடைபெறுகிறது. மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் மக்களுக்கானது” என்று கூறினார்.
மேலும் அவர் தமிழர்களுடைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நம் கட்சியின் சார்பில் சென்னையில் நடத்த திட்டமிட்டு இருக்கின்றோம். இதற்காக, முதல் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. சென்னையில் இருக்கும் மெரினா கடற்கரையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஆளுநரின் கருத்துக்கு தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழ்நாடு வாழ்க என்பதை பல்வேறு மொழிகளில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், “#தமிழ்நாடு வாழ்க, #തമിഴ്നാട് വിജയിക്കട്ടെ, #తమిళనాడు వర్ధిల్లాలి, #ತಮಿಳುನಾಡಿಗೆ, ಜಯವಾಗಲಿ, #तमिलनाडु जयहो ।, Long live #TamilNadu, Long live #India என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.