Terrorists: ஜம்மு – காஷ்மீரின் ரியாசி பேருந்து மற்றும் தோடா கிராமத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 4 தீவிரவாதிகளின் படங்களை காவல் துறை வெளிட்டுள்ளது. இவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டம் ஹிராநகர் பகுதியில் ஒரு வீட்டின் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தீவிரவாத தாக்குதலில் கிராம மக்கள் 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இருப்பினும் தீவிரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களை பிடிக்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஹிராநகர் பகுதியில் விமானங்கள் மூலம் தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் உள்ள படேர்வா பானி சாலையில் உள்ள சட்டர்கல்லா பகுதியில் உள்ள ராணுவத்தின் தற்காலிக செயல்பாட்டு தளத்தின் (TOB) மீது நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர், 6 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர் மேலும், பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்திவருகின்றனர். இதனால் பதற்றம் நிலவிவருகிறது.
முன்னதாக ரியாசியில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பக்தர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களில் நடந்த மூன்றாவது பயங்கரவாதச் சம்பவம் இதுவாகும். கதுவாவில் சுட்டுக் கொல்லப்பட்டவர் பாகிஸ்தான் பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், ரியாசி பேருந்து, தோடா உள்ளிட்ட இடங்களில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்தவர்களின் 4 பேரின் படங்களை காஷ்மீர் காவல்துறை வெளியிட்டுள்ளது. இவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல் தருபவர்களுக்கு அல்லது கைது செய்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை…! மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை…!