கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உருவாகிறது தென்பெண்ணை ஆறு. இந்த ஆறு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களை கடந்து வங்கக்கடலில் கலக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கேஆர்பி அணை கட்டப்பட்டுள்ளது.
இந்த அணையில் சேமிக்கப்படும் தண்ணீர், குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் நந்தி மலை, தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவு இருக்கும் போது கேஆர்பி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகமாக இருக்கும். தற்போது கர்நாடகாவின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முழுக்கொள்ளளவான 52 அடி உயரம் கொண்ட இந்த கேஆர்பி அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டி 50.40 அடியாக உள்ளது. இதனை தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் 1,290 கனஅடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஆற்றின் கரையை கடக்க வேண்டாம் என்றும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கால்நடைகளை ஆற்றங்கரையோரம் மேய்ச்சலுக்காக கொண்டு செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.