மும்பையில் மைனர் பெண்ணை ITEM என அழைத்த நபருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி 16 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அங்கு அமர்ந்திருந்த 25 வயது தொழிலதிபர் அந்த சிறுமியின் பின்னால் சென்று சிறுமியின் தலை முடியை இழுத்து தகாத வார்த்தையால் திட்டியதாகவும் அந்த சிறுமியை ஐட்டம் எனவும் கூறியுள்ளார். மேலும், அந்த சிறுமியின் தலைமுடியை பிடித்து இழுத்து தள்ளிவிட முயன்றுள்ளார். தொடர்ந்து அந்த சிறுமியிடம் அத்துமீறிய அந்த நபர் “நான் விரும்பியதை தன்னால் செய்ய முடியும்” என்று கூறியுள்ளார். இதனையடுத்து 100ஐ டயல் செய்து காவல்துறைக்கு அழைத்துள்ளார். ஆனால், போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் சம்பவம் குறித்து சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மும்பை போக்சோ நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வழக்கு தொடர்ந்தார். இதற்கு தீர்ப்பு வழங்கிய மும்பை போக்சோ நீதிமன்ற சிறப்பு நீதிபதி எஸ்.ஜெ.அன்சாரி, சிறுமியை ஐட்டம் (ITEM) என அழைத்த தொழிலதிபருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், பெண்களை இழிவாக பேசுவதற்காகவே ஆண்கள் இந்த வார்த்தையை உபயோகிப்பதாக நீதிபதி எஸ்.ஜெ.அன்சாரி கருத்து தெரிவித்தார். மேலும், “இதுபோன்ற குற்றங்களை கடுமையாக கையாள வேண்டும், ஏனெனில் இதுபோன்ற சாலையோர ரோமியோக்களுக்கு பாடம் கற்பிக்கப்பட வேண்டும்” என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.