பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் முச்சல் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார் கூலித்தொழிலாளி. இவரது 16 வயது மகள் இரவு வீடு திரும்பாத நிலையில், மறுநாள் காலையில் தனது காதலனுடன் வீட்டுக்கு வந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, அந்த இளைஞருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆத்திரம் தீராத நிலையில், அந்த இளைஞரை அங்கிருந்து அடித்து துரத்திவிட்டு தனது மகளை இரும்பு கம்பியாலும், கையாளும் அடித்துக் கொடூரமாக கொலை செய்தார். பின்னர், தனது இருசக்கர வாகனத்தின் பின்புறம், கொலை செய்யப்பட்ட தனது மகளின் உடலை கட்டி, சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றார்.
இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், தனது மகளின் உடலை ரயில்வே தண்டவாளத்தில் வீசிவிட்டு அந்த கொடூர தந்தை வீட்டிற்கு திரும்பினார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர். பெற்றோரை மீறி காதலித்ததால், தனது 16 வயது மகளை தந்தையே ஆணவக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.