திருப்பூர் காமாட்சியம்மன் கோவில் வீதியில் இருக்கின்ற வணிக வளாகத்தில் அனுமத்சிங் என்பவர் குக்கர், மிக்ஸி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இவருடைய கடைக்கு துப்பாக்கி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த மர்ம நபர்கள், உரிமையாளரை மிரட்டி 15 லட்சம் ரூபாய் பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து விசாரணை இறங்கிய காவல்துறையினர் பல்லடம் சாலையில் கொள்ளையர்கள் விட்டு சென்ற காரை கைப்பற்றி இருக்கின்றனர்.தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் கை ரேகைகளை சேகரித்த அவர்கள் கார் உரிமையாளர் சக்திவேல் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், கொள்ளையர்கள் பணத்துடன் தப்பிச்சென்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.
மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கின்ற காமாட்சியம்மன் கோவில் வீதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.