ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் விண்கலம் அனுப்பி சாதித்த நிலையில், கடந்த 2008 முதல் அதற்கு முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. 2008 ஆம் ஆண்டில் சந்திராயன் 1 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. நிலவில் இருந்து அது எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் வாயிலாக நிலவில் நீர் இருக்கும் சுவடுகள் தெரிந்தது.
அதை தொடர்ந்து கடந்த 2019இல் சந்திராயன் 2 விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது. ஆனால், அது தரையிறங்கும் சமயத்தில் ரோவர் கருவி வேகமாக நிலவில் மோதி வெடித்து சிதறியது. இருப்பினும் அதன் ஆர்பிட்டர் பல்வேறு தகவல்களை தொடர்ந்து அனுப்பி சந்திரயான் 3 திட்டத்துக்கும் உதவியது.
விடா முயற்சியாக போராடி கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி நிலவின் இருண்ட பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் பூமியின் நீள் வட்டப் பாதையில் 5 முறை சுற்றி வந்தது. பின்னர் நிலவின் ஆர்பிட்டுக்குள் நுழைந்த சந்திரயான் 3 பல நாட்கள் நீள் வட்டப்பாதையில் சுற்றி, கடந்த 23 ஆம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் விண்கலத்தை நிறுவிய 4-வது நாடு, நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது.
பூமியில் 14 நாட்கள் ரோவர் ஆய்வு செய்த சூழலில், அங்கு இரவு வர தொடங்கியது. சூரிய சக்தியில் இவை செயல்படுவதால் விக்ரம் லேண்டரையும், ரோவரையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஸ்லீப்பிங் மோடுக்கு (Sleeping Mode) கொண்டு சென்றனர். இந்நிலையில், மீண்டும் பகல் வந்தது. ஆனால், தூக்கத்தில் இருந்து விக்ரம் லேண்டரையும், ரோவர் கருவியையும் இஸ்ரோ விஞ்ஞானிகளால் இதுவரை எழுப்ப முடியவில்லை.
இந்நிலையில், சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியபோது சுமார் 2.06 டன் சந்திர ரீகோலித் (பாறைகள் மற்றும் மண்) இடம்பெயர்ந்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.