சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியிருந்த படம் பத்து தல. இந்தத் திரைப்படத்தை ஒபேலி கிருஷ்ணா இயக்கியிருந்தார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், மானுஷ்யபுத்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் இன்று வெளியாகிறது. அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாததால் அனைத்து தியேட்டர்களிலும் காலை 8:00 மணி முதல் காட்சிகள் துவங்கின. இந்நிலையில் சென்னையில் பிரபலமான ரோகினி தியேட்டரில் டிக்கெட் வாங்கியிருந்த இரண்டு ரசிகர்களை ஊழியர்கள் தியேட்டருக்குள் அனுமதிக்காத சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பயிருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
ரோகினி தியேட்டரில் இன்று காலை காட்சிக்காக இரண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்த நரிக்குறவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் திரைப்படம் காண்பதற்காக திரையரங்கிற்கு வந்திருக்கின்றனர். ஆனால் ரோகிணி திரையரங்கை சார்ந்தவர்கள் அவர்களுக்கு அனுமதி மறுத்திருக்கின்றனர். இதனைக் கண்ட ரசிகர்களும் தியேட்டர் நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தியேட்டரில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு செய்திருக்கும் ரசிகர்கள் ஒருவரது உருவம் மற்றும் தோற்றத்தை வைத்தும் ஜாதி பாகுபாட்டினால் புறக்கணிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்ன கடுமையாக சாடியிருக்கின்றனர். இந்நிலையில் டிக்கெட் வைத்திருந்தும் பாகுபாட்டின் காரணமாக அனுமதி வழங்கப்படாத விவகாரம் நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்ததும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக ரோகினி தியேட்டர் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.