கர்நாடகாவில் 10 ஆம் வகுப்பு மாணவனுடன் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை ஒருவரின் காதல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் சமீபத்தில் ஆய்வு சுற்றுலா சென்றனர். அப்போது அந்த பெண் ஆசிரியை பத்தாவது மாணவனுடன் நெருக்கமாக படம் எடுத்துள்ளார். இது வைரலானதையடுத்து, அவர் உயர் அதிகாரிகளால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியை முருகமல்ல கிராம அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை புஷ்பலதா என்பது தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்களில் அந்த ஆசிரியை மாணவனுக்கு முத்தமிடுவது போன்றும், மாணவன் ஆசிரியைக்கு முத்தமிடுவது போன்றும், ஆசிரியையை மாணவன் தூக்குவது போன்றும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த சம்பவம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. “இந்த சமூகத்தில் நாம் எங்கு செல்கிறோம்? கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு மாணவனுடன் முருகமல்ல அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரின் காதல் போட்டோஷூட்டின் படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகியுள்ளன” என அந்த புகைப்படங்களை பகிர்ந்து எக்ஸ் பயனர் அமித் சிங் ரஜாவத் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இதனால் ஆத்திரமடைந்த 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனின் பெற்றோர், சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தக் கோரி வட்டார கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏராளமானோர் வலியுறுத்தி வருகின்றனர்.