தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தகுதியுள்ள குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சுமார் ஒரு கோடியே 16 லட்சம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.
மேலும் புதிதாக திருமணமானவர்கள், புதிய ரேஷன் அட்டை பெற்றவர்கள், கல்லூரி படிப்பை முடித்தவர்கள் என மாதம் தோறும் ஆயிரக்கணக்கில் மகளிர் உரிமைத்தொகைக்காக புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதனால், ஒவ்வொரு மாதமும் மகளிர் உரிமைத்தொகைக்கான பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசின் விதிமுறைகள் பொருந்தாததால் தற்போது சுமார் 1 லட்சத்து 27 ஆயிரம் பயணிகள் இத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதிக வருமானம், நிலம் வாங்குதல், அரசுப் பணிகளில் சேர்ந்தவர்கள், உயிரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் பயனாளிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பயனாளிகளின் வங்கி கணக்குகள், நிலப்பதிவுகள், வருமான வரி கணக்குகள், வாகனப்பதிவு ஆகியவை டிஜிட்டல் முறையில் சமூக பாதுகாப்பு ஆணையரால் கண்காணிக்கப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பயனாளிகள் பட்டியலில் தங்கள் பெயர் தொடர்கிறதா..? அல்லது நீக்கப்பட்டுள்ளதா..? என்பது குறித்து அறிய பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், அவர்கள் இ-சேவை மையத்துக்கு படையெடுத்து வருகின்றனர். ஆனால், தங்கள் கணினி அல்லது செல்போனில் பயனாளிகள் நிலை குறித்தும் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கென https://kmut.tn.gov.in/login.html என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், login என்பதை க்ளிக் செய்து, ‘பொதுமக்கள் உள்நுழைவு’ என்பதை கிளிக் செய்தால், அதில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு ‘ஓடிபி அனுப்பவும்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு தங்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு வரும் ‘ஓடிபி’ உள்ளிட்டு ‘கேப்ட்சாவை உள்ளிட்டு ‘சரிபார்க்க’ என்பதை க்ளிக் செய்தால் தங்கள் விண்ணப்பம் அல்லது தங்கள் பயனாளி நிலை குறித்த விவரங்கள் தெரியவரும்.
Read More : யார் இந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்..? தந்தை, மகனை காவு வாங்கிய ஈரோடு கிழக்கு தொகுதி..!!