குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் என்ன கூறுகிறாரோ அது நடக்கும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்…
திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.. எனவே எப்போது இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.. மேலும் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன..

இதனிடையே பெண்களுக்கு ரூ.1000 உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.. ஆனால் தேர்தல் வாக்குறுதியின் படி, மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுவது உறுதி என்று முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்தார்.. மேலும் சமீபத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின், வரும் மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.. அந்த நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு உரிமைத்தொகை ரூ.1000 எப்போது வழங்கப்படும் என்பதை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்..
இந்நிலையில் குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் என்ன கூறுகிறாரோ அது நடக்கும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்… கோவையில் எக்ஸ்பெரிமெண்டா என்ற அறிவியல் மையத்தை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்துவைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சரிடம், தமிழக பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கான அறிவிப்புகள் இருக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு பதிலளித்த அவர், பட்ஜெட் குறித்து தற்போது தன்னால் எந்த தகவலையும் வெளியிட முடியாது என்றும், மகளிர் உதவித்தொகை தொடர்பாக முதலமைச்சர் என்ன கூறுகிறாரோ அது நடக்கும் என்று தெரிவித்தார்..
இதன் மூலம் மார்ச் 20-ம் தேதி தொடங்க உள்ள மாநில பட்ஜெட்டில், குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பது உறுதியாகி உள்ளது.. மேலும் எந்தெந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்குவது என்பது குறித்து தற்போது கணக்கெடுப்பு நடப்பதாகவும் கூறப்படுகிறது..