பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்கிட தமிழக அரசால் ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகையானது கடந்த 15ஆம் தேதி முதலமைச்சர் முக.ஸ்டாலினால் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இதனையடுத்து, ஒரு கோடி பெண்களுடைய வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், இன்னும் ஏராளமான பேருக்கு குறுஞ்செய்தி வந்தும் இன்னமும் பணம் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோருக்கு நாளை முதல் உதவி மையம் செயல்பட தொடங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதாவது, விண்ணப்பம் நிராகரிப்பு, மீண்டும் விண்ணப்ப பதிவு, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குக்கு தொகை வராமல் இருப்பது உள்ளிட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் உதவி மையத்தை அணுகி தீர்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.