மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500, பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கி வருவதை தொடர்ந்து, கர்நாடகாவிலும் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டம் அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் நடைமுறைக்கு வரவுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 14ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 64 ஆயிரத்து 532 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 5.06 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் இப்போது சவுஹான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால் அங்கு ஆட்சியைக் கைப்பற்றுவதில் காங்கிரஸ், பாஜக தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், தலைநகர் போபாலில் காங்கிரஸ் மாநில தலைவர் கமல்நாத் சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் மக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.