கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் சட்டமன்றக் கட்சித் தலைவருமான ஹெச்.டி குமாரசாமி வாக்காளர்களுக்கு மேலும் ஒரு வாக்குறுதியை அறிவித்தார். இந்த தேர்தலில் ஜேடிஎஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் மகன்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்ற தனித்துவமான வாக்குறுதியை ஹெச்.டி.குமாரசாமி அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் “கோலார் மாவட்டத்தில், விவசாயிகளின் மகன்களை திருமணம் செய்ய பெண்கள் தயாராக இல்லை என, பல இளைஞர்கள் என்னிடம் மனு கொடுத்துள்ளனர். எனவே விவசாயிகளின் மகன்களை திருமணம் செய்ய பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 2 லட்சம் தருவோம். மாநிலத்தில் இதுகுறித்து புதிய திட்டம் கொண்டு வருவோம்..
எனவே விவசாயிகளின் மகன்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு அரசு 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். நமது இளைஞர்களின் சுயமரியாதையை பாதுகாக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் திட்டங்களில் இதுவும் ஒன்று.” என்று தெரிவித்துள்ளார்.. மாண்டியா மாவட்டத்தில் விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு மணப்பெண்கள் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படும் நிலையில் குமாரசாமியின் இந்த வாக்குறுதி முக்கியத்துவம் பெறுகிறது.
ஹெச்.டி.குமாரசாமி பல்வேறு திட்டங்களை அறிவித்து தனது ஜேடிஎஸ் கட்சியை விவசாயிகளுக்கு ஆதரவான கட்சியாக முன்னிறுத்தி வருகிறார். முன்னதாக, விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவித் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என பல தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார்.. ஜேடிஎஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு மருத்துவ உதவி கிடைக்கும், அனைத்து ஊராட்சி மையங்களிலும் இலவச டயாலிசிஸ் வசதியுடன் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்…
கர்நாடகாவில் ஒரே கட்டமாக மே 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றன. இதனால் அங்கு 4 முனை போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.