தமிழுக்கு தொண்டாற்றிய நபர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதும் ரூ.25,000/- பரிசுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தமிழக அரசு கூறியதாவது; தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்ச் செம்மல் என்ற விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தெரிவு செய்து அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதும் ரூ.25,000/- பரிசுத் தொகையும் தகுதியுரையும் 2015 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுக்கு மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் இருந்து விண்ணப்பங்களை இலவசமாக (https://tamilvalarchithurai.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிப்பவர்கள் தன்விவரக் குறிப்புடன் இரண்டு நிழற்படம், அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகம். காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு 10.08.2024 ஆம் நாளுக்குள் அனுப்பப்பட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.