தமிழகத்தில் கடல் மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையில், கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு முறைச்சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020-ன் படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜீன் மாதம் 14-ம் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.
மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களின் துயரினை களைந்திட 14 கடலோர மாவட்டங்களிலும் உள்ள 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட கடலோர மீனவ குடும்பங்களுக்கு, குடும்பம் ஒன்றுக்கு ரூ.5,000 வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக தமிழக அரசு வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி பயனாளி முழுநேர மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவராகவும், வறுமைக் கோட்டிற்கு கீழ் (BPL) வசிப்பவராகவும் மற்றும் 18 முதல் 60 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
சமிபத்தில் இராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின், 2023-24 ஆம் ஆண்டிற்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்துள்ள தகுதியான 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறாத 1,5089 மீனவர்களுக்கு சிறப்பினமாக ரூ.5000/- மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை வழங்கப்படும் அறிவித்தார். அவ்வறிப்பின்படி 22.08.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.