கடந்த செவ்வாய்க்கிழமை தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது. இந்த சோதனை முடிவில் நடந்த புதன்கிழமை அதிகாலை செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அவர் தற்போது ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இன்னும் ஓரிரு தினங்களில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தான் நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் பாஜக தொடர்பாகவும் அதிமுக தொடர்பாகவும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாகவும் பல்வேறு விஷயங்களை பேசி இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று எடப்பாடி பழனிச்சாமி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் முதலமைச்சர் தொடர்ந்து ஊழல் புரிந்திருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாகவே பேசி வருகிறார் என்று பேசியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
மேலும் தற்போதைய திமுகவிற்கு மக்கள் எதற்காக ஆட்சியை கொடுத்தார்களோ, அந்த வேலையை திமுக கவனிக்கவில்லை என்று அவர் பேசியிருக்கிறார். மேலும் ஸ்டாலின் ஒரு திறமையற்ற முதலமைச்சர், எதுவுமே தெரியாத ஒரு முதலமைச்சர் என்று குறிப்பிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
மேலும் தற்போது மருத்துவமனையில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறை நிர்வாகத்தின் கீழ் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் செந்தில் பாலாஜி தங்களைப் பற்றியும் தங்கள் கட்சியை பற்றியும் முக்கிய விவரங்களை இங்கே சொல்லிவிடுவாரோ என்ற அச்சம் காரணமாக மருத்துவமனைக்கு சென்று முதலமைச்சர் செந்தில் பாலாஜி பார்க்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
முதலமைச்சர் மட்டுமல்லாமல் அவருடைய அமைச்சரவை சாகாக்கள் அனைவரும் வரிசையாக வந்து செந்தில் பாலாஜியை பார்த்துவிட்டு செல்வதிலும் ஒரு அச்சம் இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, நாம் செய்த ஊழல்கள் அனைத்துக்கும் இவர்தான் சாட்சி, ஒருவேளை இவர் அமலாக்கத்துறையிடம் நம்மைப்பற்றி கூறிவிட்டால் நமக்கும் சிக்கல் வந்து விடுமோ என்று முதலமைச்சரின் அமைச்சரவை சகாக்கள் பயத்தில் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
ஒருவேளை செந்தில் பாலாஜி எந்த உண்மையையாவது வெளியே சொல்லிவிட்டால் தன்னுடைய குடும்பத்திற்கும் பிரச்சனை வந்துவிடும் தன்னுடைய பதவியும் போய்விடும், ஆட்சியும் போய்விடும் என்ற பயத்தில் தான் முதலமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது கண்ணும் கருத்துமாக இருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இதற்கு முன் திமுகவைச் சார்ந்தவர்கள் எத்தனையோ பேர் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது. அப்போதெல்லாம் முதலமைச்சர் எதுவும் பேசவில்லை. திருமதி கனிமொழி அவர்கள் பெயரிலும் ராசா அவர்களின் பெயரிலும் 2ஜி வழக்கு போடப்பட்டு அவர்கள் சிறைக்கு சென்ற போது கூட திமுக இந்த அளவுக்கு பதறவில்லை.
ஆனால் தற்போது நம்முடைய ஆட்சிக்கும் குடும்பத்திற்கும் ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்ற பயத்தில் பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்தித்து பேசுகிறார் முதலமைச்சர் என்று குறிப்பிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
எதிர்க்கட்சித் தலைவரின் இந்த குற்றச்சாட்டுக்கு திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பதில் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடைபெற்ற போது எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்தார்? பாரதிய ஜனதா கட்சியின் மிரட்டலுக்கு பயந்து மாற்று கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி. மருத்துவமனையில் செந்தில் பாலாஜி முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்ததை எடப்பாடி பழனிச்சாமி கொச்சைப்படுத்தி பேசி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு நடுவே எந்தவித விசாரணைக்கும் தயார் என முதலமைச்சர் கூறியிருக்கிறார் அதோடு செந்தில் பாலாஜியிடம் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார் முதலமைச்சர் இன்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்திருக்கிறார்.