ரஷ்யாவினால் முன்வைக்கப்படும் சர்வதேச தரத்தை சரக்குகளில் கவனிக்கப்படாவிட்டால் அரிசி இறக்குமதியை மீண்டும் தடை செய்ய போவதாக ரஷ்யா பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.
சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதிக்கு ரஷ்யா தடை விதித்தது. இதேபோல், 2006 டிசம்பரில், உணவுப் பாதுகாப்புத் தரத்தை பூர்த்தி செய்யாததால் பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதை ரஷ்யா நிறுத்தியது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில் சர்வதேச மற்றும் ரஷ்ய தாவரவியல் விதிகள் மீறப்பட்டுள்ளதை, ரஷ்யா கண்டறிந்த நிலையிலேயே ரஷ்யாவின் FSVPS என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற மீறல்களைத் தடுக்குமாறு பாகிஸ்தான் தூதரகத்துக்கு ரஷ்ய அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
அத்துடன் அனைத்து பாகிஸ்தானிய அரிசி ஏற்றுமதியாளர்களும் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் செய்யப்படும் விவசாயப் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பைட்டோசானிட்டரி தரநிலைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளனர். மேற்கண்ட விதிமுறைகளை மீறினால் அரிசி இறக்குமதி தடை செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.