சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளிலும், 116 ஒருநாள் போட்டிகளிலும், 65 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், உலகில் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக இருந்தார்.
இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 156 விக்கெட்டுகளையும், சர்வதேச டி20 போட்டிகளில் 73 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் அஸ்வின். ஆஸ்திரேலியாவுடனான பார்டர் – கவாஸ்கர் தொடரின் 3ஆவது போட்டி இன்று டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து தான் ஓய்வு பெறப்போவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பந்துகளை துல்லியமாக வீசுவதில் அஸ்வின் கில்லி என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். மேலும் பவுலிங் இல்லையென்றால் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய அஸ்வின் இந்தியாவின் மேட்ச் வின்னராக செயல்பட்டதாகவும் சச்சின் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அஸ்வின், மனதும் மூளையும் ஒன்றிணைந்து நீங்கள் போட்டியை அணுகும்விதம் குறித்து நான் எப்போதும் பிரமித்திருக்கிறேன்.
பந்தினை வீசுவதில் இருந்து முக்கியமான ரன்களை அடிப்பதும்வரை நீங்கள் எப்போதும் வெற்றிக்கான வழிகளை கண்டுபிடிக்கிறீர்கள். இளம் திறமைசாலியாக உங்களைப் பார்த்ததில் இருந்து இந்தியாவின் முக்கியமான ஆட்ட நாயகனாக வளர்ச்சியடைந்தது அற்புதமானது. உண்மையான மகத்துவம் என்பது பரிசோதனை செய்ய பயப்படாததும் பரிணமிப்பதும்தான் என உங்களது பயணம் எடுத்துரைக்கிறது. உங்களது கிரிக்கெட் பயணம் ஓவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்கும். உங்களது வாழ்க்கையின் இரண்டாவது பாகத்துக்கு வாழ்த்துகள் என்றார்.
Read more ; கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த மாமியாரை கொன்று நாடகமாடிய பெண்..!! சிக்கியது எப்படி?