முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு ‘வாழும் காமராஜர்’ என்ற விருதை வழங்கிய போது, மாமேதையுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் எனக்கூறி விருதை ஏற்க மறுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தில் பெருந்தலைவர் காமராஜர் மக்கள் பேரவை சார்பில், முதலாமாண்டு துவக்க விழா, வாழும் காமராஜர் விருது வழங்கும் விழா மற்றும் காமராஜர் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், மக்கள் பாதை பேரியக்கத் தலைவருமான சகாயம் தலைமையில் நடைபெற்ற நிலையில், அவருக்கு வாழும் காமராஜர் விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், பெருந்தலைவர் காமராஜருடன் தன்னை ஒப்பிட்டு விருது வழங்க வேண்டாம் என்றும், அவருக்கு இணை யாருமில்லை என்றும் கூறிய சகாயம், விழாக்குழுவினர் போர்த்திய சால்வையையும் ஏற்க மறுத்தார். இதையடுத்து அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அப்பகுதியில் உள்ள மளிகைக் கடைக்கு சென்று உடனடியாக பனை வெல்லமான கருப்பட்டியை பாரம்பரிய உணவுப் பொருள் எனக்கூறி, புத்தகங்களுடன் வழங்கி கௌரவித்தனர். பின்னர், அப்பகுதியைச் சேர்ந்த ஏழை-எளிய மாணவர்களுக்கு நிகழ்ச்சியில் புத்தகப்பை வழங்கப்பட்டது. விருது கிடைக்காதா? என்று அலைவோர் மத்தியில் பலரும் விரும்பி கொடுக்க முயன்ற விருதை சகாயம் ஏற்க மறுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.