கடந்த 1983ல் இந்தியா உலககோப்பை வென்றபோது அணியின் வீரர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி விளையாடும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது என்றால் அது மிகையாகாது .ஆரம்பத்தில் பொழுது போக்காக விளையாட ஆரம்பித்த இந்த விளையாட்டு காலப்போக்கில் ஒரு நாட்டின் தேசிய விளையாட்டாக இருக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது .மற்றும் பணம் சம்பாதிக்கும் தொழிலாகவும் மாறி உள்ளது . உலகம் முழுவதும் பல கோடி கணக்கான மக்கள் இந்த கிரிக்கெட் விளையாட்டை தொலைக்காட்சி மூலமாகவும் ,மைதானத்தில் நேரடியாகவும் பார்த்து ரசிக்கின்றனர் .இதன் மூலம் பல கோடி ரூபாய் வியாபாரம் நடைபெறுகிறது .உலகம் முழுவதும் பல நாட்டு வீரர்கள் தங்கள் வாழ்க்கையை இந்த விளையாட்டிற்காக அர்ப்பணித்து உள்ளனர்.
அந்தவகையில், 1980 – 90 காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெற்ற சம்பளம் குறித்தான செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. அதிலும், குறிப்பாக, 1983ம் ஆண்டு, என்பது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டாகும். ஏனென்றால் அந்த சமயத்தில் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்த முடியாத பலம் வாய்ந்து இருந்தது. உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் கிரிக்கெட்டுக்காக நடத்தப்பட்ட முதல் 2 உலககோப்பையை அந்த அணி தான் வென்று இருந்தது.
அதன்பிறகு 1983ல் நடந்த உலககோப்பை போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் பைனலுக்கு முன்னேறிய நிலையில் அந்த அணியை தோற்கடித்து இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தான் இந்தியா உலககோப்பையை உச்சி முகர்ந்தது. அப்போது இந்திய கேப்டனாக கபில் தேவ் இருந்தார். மேலும் ஸ்ரீகாந்த், மொஹிந்தர் அமர்நாத், யஷ்பால் ஷர்மா, ரோஜர் பின்னி, சயீத் கிர்மானி, பல்விந்தர் சந்து, கிர்த்தி ஆசாத், மதன் லால், ரவி சாஸ்திரி, சந்தீப் பாட்டீல், சுனில் கவாஸ்கர், திலீப் வெங்சர்கர், சுனில் வால்சன் உள்ளிட்டோர் அணியில் இடம்பிடித்து இருந்தனர்.
அந்த நேரத்தில் இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு போட்டிக்கான சம்பளமாக தலா ரூ.1500 வழங்கப்பட்டுள்ளது. இப்போது இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியாக உள்ள ஐபிஎல்லில் பங்கேற்கும் வீரர்களுக்கும் லட்சம் முதல் கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது. அதனை ஒப்பிடும்போது கபில் தேவ் தலைமையில் 1983ல் உலககோப்பை வென்ற இந்திய அணி வீரர்களின் சம்பளம் என்பது மிகமிக சொற்ப தொகையாகும். மேலும் 1983க்கும் பிறகு 28 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணி 2011 உலககோப்பையை வென்றது. அப்போது டோனி தலைமையிலான இந்திய அணிக்கு வெகுமதியாக பணம் மற்றும் ரியல்எஸ்டேட் ரிவார்ட்ஸ் வழங்கப்பட்டது. ஒவ்வொரு வீரர்களுக்கும் பிசிசிஐ சார்பில் ரூ.2 கோடி வழங்கப்பட்டது.
முன்னதாக 2003ல் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அப்போதும் கூட இந்திய அணி வீரர்கள் பிசிசிஐ மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் மூலம் தலா ரூ.70 லட்சத்தை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிசிசிஐ ‘ஆண்டு ஒப்பந்தங்கள் மூலம் அவர்களின் கிரேடுகளின் அடிப்படையில் கிரிக்கெட் வீரர்களின் வருவாயை நிர்ணயிக்கிறது. உலகின் பணக்கார விளையாட்டு அமைப்புகளில் ஒன்றான இந்திய கிரிக்கெட் வாரியம், A+, A, B மற்றும் C ஆகிய நான்கு கிரேடுகளில் ஒப்பந்தங்களை வழங்குகிறது. கிரேடு C வீரர்களுக்கு ஆண்டு கட்டணம் ரூ. 1 கோடியும், கிரேடு B கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.3 கோடியும், கிரேடு A கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.5 கோடியும், வழங்கப்படுகிறது, கிரேடு A+ கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.7 கோடியும் வழங்கப்படுகிறது.
விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய நான்கு வீரர்கள் மட்டுமே A+ கிரேடு ஒப்பந்தத்தை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் போட்டிக் கட்டணம் மற்றும் கணிசமான கொடுப்பனவுகளைப் பெறுகிறார்கள். அதன்படி ஒருநாள் போட்டிகளுக்கு ரூ. 6 லட்சம், T20 போட்டிகளுக்கு ரூ. 3 லட்சம் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரூ.15 லட்சம் பெறுகின்றனர்.