ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் 7,500 ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நல இயக்குநர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் 221 தற்காலிக ஆசிரியர்களும், காலியாக உள்ள 194 பணியிடங்களுக்குத் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்களும் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.