65 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் சுமார் 48 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் ஒரு நற்செய்தி வெளியாக உள்ளது… ஆம்.. அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் குறித்து மார்ச் முதல் வாரத்தில் முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. ஆனால், டிசம்பரில் தொழிலாளர் அமைச்சகம் வழங்கிய ஏஐசிபிஐ குறியீட்டுத் தரவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.. இதனால் அகவிலைப்படி உயர்வு எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..
ஜூலை முதல் நவம்பர் வரை, ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் சீரான உயர்வை எட்டியது.. இதனால் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் டிசம்பரில் ஏஐசிபிஐ எண்ணிக்கை குறைந்ததால் இம்முறை 4% உயர்வு இருக்காது என்று கூறப்படுகிறது.. தொழிலாளர் அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட டிசம்பர் 2022க்கான ஏஐசிபிஐ குறியீடு, நவம்பர் மாதத்தை விட குறைவாக இருந்தது..
எனவே அகவிலைப்படியில் 3 சதவீத உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது.. மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜூலை மாதத்தில் 4% உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து 38% ஐ எட்டியுள்ளது. 3 சதவீதம் உயர்த்தப்படும் பட்சத்தில், தற்போது 41 சதவீதமாக உயரும். வரும் மார்ச் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. எனவே மார்ச் மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும் உயரும்..
ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது.. ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு அகவிலைப்படி விகிதம் அரசாங்கத்தால் திருத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.