தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தப்படுமா? என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் DPI வளாகத்தில் 61 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பதவி உயர்வு ஆணையை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “மழைக்காலத்துக்கு முன்னரே இடியும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள கோப்புகள், வருகைப் பதிவேடு விவரங்கள் போன்றவற்றை உயரமான, பாதுகாப்பான இடங்களில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பள்ளிகள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சாதனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
LKG, UKG தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை – நிதித்துறை இடையே அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு பின் நிதியமைச்சருடன் நான் ஆலோசிக்க உள்ளேன். அப்போது ஆசிரியர்களின் கோரிக்கைகள் உட்பட அனைத்தையும் விவாதித்து முடிவு எடுக்க உள்ளோம். தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தலாமா என்பதை நிதிநிலையைப் பொறுத்து முதலமைச்சரின் அலுவலகம் தான் முடிவு செய்யும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.