மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ், அகவிலைப் படி, வீட்டு வாடகை கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17% இல் இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டது.. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மேலும் 3% உயர்த்தப்பட்டது, 34% ஆக மாறியது..
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த முறை 4 சதவீத அகவிலைப்படி (DA) உயர்வு கிடைக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. இந்த உயர்வு ஜூலை மாத சம்பளத்திலேயே கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (ஏஐசிபிஐ) 4 சதவீதம் வரை உயர்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது..
அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்த ஆண்டின் இரண்டாவது அகவிலைப்படி (டிஏ) திருத்தம் குறித்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை 4 சதவீதம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த எண்ணிக்கை 38 சதவீதத்தை எட்டும்.
அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தினால், அடிப்படைச் சம்பளமான ரூ.18,000க்கு ஆண்டுக்கு ரூ.8,640 ஆகவும், ரூ.56,000 என்ற அடிப்படை சம்பளத்திற்கு ரூ.27,312 ஆகவும் உயர்த்தப்படும்.
தற்போது ரூ.18,000 அடிப்படை சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீத புள்ளிவிபரப்படி மாதம் ரூ.6120 டிஏ வழங்கப்படுகிறது. இந்த தொகை மாதத்திற்கு ரூ.6,840 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.. அதாவது இது மாதந்தோறும் ரூ.720 மற்றும் ஆண்டுக்கு ரூ.8,640 என அதிகரிக்கும்..