சேலம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு மீதான பரிசீலனை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வேட்பாளராக போட்டியிடுபவருக்கு இரண்டு இடங்களில் வாக்குரிமை இருப்பது உறுதி செய்யப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 17, 18-ன் படி கிரிமினல் குற்றம் ஆகும். இந்நிலையில், இரட்டை வாக்குரிமை சர்ச்சை எழுந்ததால், டி.எம்.செல்வகணபதியிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
விளக்கம் கொடுக்கும் வரை வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. செல்வகணபதி மனு பரிசீலனைக்குப் பிறகு ஏற்கப்படுமா? நிராகரிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.