சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால், மீண்டும் புலன் விசாரணை தொடங்கியுள்ளதாக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசு அனுமதியின்றி தனியாக பவுண்டேசன் தொடங்கியதாக துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோர் மீது பல்கலை. ஊழியர் சங்கம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பவுண்டேசன் குறித்து கேள்வி எழுப்பியபோது சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாக துணைவேந்தர் மீது இளங்கோவன் புகார் அளித்தார். புகார்களின் அடிப்படையில் துணைவேந்தர் ஜெகநாதன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கருப்பூர் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் துணைவேந்தர் ஜெகநாதனை நீதிமன்ற காவலில் வைக்க மறுத்த சேலம் மாஜிஸ்திரேட், இடைக்கால ஜாமின் வழங்கினார். தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி துணைவேந்தர் ஜெகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கு தொடர்பான ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை எனக் கூறி, துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், தடையை நீக்கி உத்தரவிட்டிருந்தது. துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கில் முழு வீச்சில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், துணைவேந்தர் ஜெகநாதன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.