தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகள் அவர்களே பாடத்திட்டங்களை வடிவமைத்துக் கொள்வர். மேலும், அரசு கல்லூரிகள் அரசின் பாடத்திட்டங்களை பின்பற்றுவார்கள். எனினும் முதல்முறையாக மாநிலம் முழுவதும் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளில் 75 சதவீத மாநில பாடத்திட்ட வடிவமைப்பு குழு உருவாக்கி தரும் பாடத்திட்டங்களை தான் பின்பற்ற வேண்டும் என உயர்கல்வித்துறை சார்பில் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ள 25% பாடத்திட்டங்களை அந்தந்த கல்லூரிகளே வடிவமைத்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம் வரும் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கல்லூரி இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான பாடத்திட்டங்கள் சர்வதேச தரத்தில் தயாரிக்கப்பட்டு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகளும் அரசு பாடத்திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.