மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் தோட்ட இல்லமானது அரசுடமையாக்கப்படும் என அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவும் மகன் ஜெ.தீபக்கும் வழக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, ஜெயலலிதாவின் வாரிசுகளிடம் போயஸ் தோட்டத்தை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தீபா, தீபக் இடையே பிரச்சனை நிலவி வருவதால், தீபாவை தீபக் போயஸ் தோட்ட வீட்டுக்குள் செல்ல அனுமதிப்பதில்லை என குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார் தீபா.
இந்நிலையில் 77-வது சுதந்திர தினத்தின் போது தனது அத்தையின் வீட்டில் மூவர்ணக் கொடியை ஏற்ற தனது கணவர் மாதவன், அவரது ஆதரவாளர்கள் சென்றிருந்தனர். அங்கு அவர்களை தீபக் தடுத்து நிறுத்தியுள்ளார். அதையும் மீறி தீபா போயஸ் தோட்டத்தில் தேசியக் கொடி ஏற்றினார். அதேபோல், போயஸ் தோட்டத்தில் ஜெயா டிவி கட்டட சுற்றுச்சுவர் அருகே ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு விநாயகர் சதுர்த்தி நிகழ்வெல்லாம் வெகு விமரிசையாக நடக்கும்.
இந்த கோயிலில் 20 ஆண்டு காலமாக ஹரிஹரன் என்பவர் பூஜை செய்து வருகிறார். இந்நிலையில், சுதந்திர தினத்தன்று அங்கு பூஜை செய்ய வந்த ஹரிஹரனுடன் தீபாவுக்கு பிரச்சனை ஏற்பட்டது. தீபாவும் மாதவனும் தன்னை பூஜை செய்யவிடாமல் தடுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக தேனாம்பேட்டை போலீசில் தீபா மீது ஹரிகஹரன் புகார் அளித்தார். மேலும், பிள்ளையாரின் வெள்ளிக் கீரிடத்தையும் பறிக்க முயன்றதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தீபா, ”சசிகலாவின் தூண்டுதலால் குருக்கள் என் மீது பொய்யான புகாரை அளித்துள்ளார். சசிகலா போயஸ் தோட்ட இல்லத்தை அபகரிக்க முயற்சிக்கிறார். சசிகலாவால் எனக்கும் எனது கணவரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. கொடநாடு கொலை விவகாரத்தில் சசிகலாவின் குடும்பத்தினருக்கும் தொடர்பு இருக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.