டெல்லியில் காற்று மாசுபாடு ஆண்டு முழுவதும் பிரச்சினையாக இருக்கும் போது, ஏன் நாடு முழுவதும் பட்டாசுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படவில்லை என்று டெல்லி அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. டெல்லியில் காற்று மாசு என்பது ஆண்டு முழுக்க நீடிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரும் சிரமத்தையே தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், பட்டாசு தடை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
அதில், நிரந்தர பட்டாசு தடை குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து நவம்பர் 25-ஆம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க சிறப்புப் பிரிவை அமைக்குமாறு டெல்லி போலீஸ் கமிஷனருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின் போது, மாசுபாட்டை ஊக்குவிக்கும் அல்லது மக்களின் ஆரோக்கியத்தில் சமரசம் செய்யும் எந்தவொரு செயலையும் எந்த மதமும் ஊக்குவிப்பதில்லை என்பது முதன்மையான கருத்து என்று உச்ச நீதிமன்றம் கூறியது. டெல்லி போலீஸ் கமிஷனர் பட்டாசு தடையை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து தனிப்பட்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அனைத்து என்சிஆர் மாநிலங்களும் மாசு குறைவாக இருப்பதை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
பட்டாசு தடை குறித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரிவிக்கவும், உரிமம் வைத்திருப்பவர்கள் யாரும் பட்டாசுகளை விற்கவோ அல்லது தயாரிக்கவோ கூடாது என்பதை உறுதிப்படுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல்துறை ஆணையருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.