தமிழ்நாட்டில் பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு இப்போதுதான் உண்மையான பாதுகாப்பு கிடைத்திருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள், பெண்கள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதேபோல, எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூட, ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்ததாக தெரிவித்திருந்தார். பயங்கரவாதிகளின் ஆட்சி நடக்கும் நாடுகளில் கூட இந்த கொடூரம் நடக்கவில்லை என்றும் ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் நடந்து வருவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களாகவே பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும், அவர்களின் கல்விச் சான்றிதழும் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் தான், செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு இப்போதுதான் உண்மையான பாதுகாப்பு கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக ஆட்சியில் இல்லாத துணிச்சல் தற்போது பெண்களுக்கு வந்துள்ளதாகவும், இதுதான் புகார்கள் அதிகரிப்பதற்கான காரணம் என்றும் தெரிவித்துள்ளார். தினந்தோறும் தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அமைச்சர் இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Read More : ’திமுகவின் கடைக்கோடி தொண்டனை நிறுத்தி அண்ணாமலையை தோற்கடிப்போம்’..!! சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு