கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மேல்புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் 17 வயதான ஜீவா, விருத்தாசலம் அரசு மேல்நிலைப்பள்ளில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம் போல் கடந்த அக்டோபர் 3ம் தேதி தனது பள்ளிக்கு செல்ல பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது ஆனந்த் என்ற நபர், நான் உன்னுடன் தனியாக பேசவேண்டும் என்று ஜீவாவை அழைத்துள்ளார். ஆனந்த், மின்சாரத் துறையில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ஆனந்த் மற்றும் ஜீவாவிற்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஜீவாவை பல முறை குத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் உள்ளவர்கள், ஜீவாவை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ஜீவாவை பரிசோதித்த மருத்துவர்கள், ஜீவா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஓரின சேர்க்கைக்கு ஜீவா ஒத்துழைக்க மறுத்ததால், அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த குற்றவாளியை, செல்போன் சிக்னலின் அடிப்படையில் தேடி வந்தனர். இதையடுத்து, சென்னை தாம்பரத்தில், மொட்டை அடித்து மாறுவேடத்தில் சுற்றித்திரிந்த ஆனந்தை கைது செய்தனர்.