12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் வரும் ஏப்ரல் 4ம் தேதி தொடங்க உள்ளது.
தமிழக மாநிலப் பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இந்த தேர்வினை 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் 145 பேர் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவர்கள் 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்களில் தேர்வு எழுதியுள்ளனர்.
தேர்வுகளின் விடைத்தாள்கள் அந்தந்த மாவட்டங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 80-க்கும் மேற்பட்ட விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு இன்று முதல் பிரித்து அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன் பின்னர் விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஏப்ரல் 4-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை முதன்மை விடைத்தாள் திருத்துபவர்களாக நியமிக்கப்படும் அனுபவம் வாய்ந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தம் செய்ய உள்ளனர்.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் வரும் ஏப்ரல் 4ம் தேதி தொடங்க உள்ளது. 12-ம் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 19 தொடங்கி ஏப்ரல் 30 வரை நடக்க உள்ளது என தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.