சமீப காலமாக, எங்கு பார்த்தாலும் தற்கொலை செய்திகள் தான். அதிலும் குறிப்பாக, பள்ளி மாணவர்களின் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் நல்லகண்டலா பகுதியில் வசித்து வருபவர், 12 வயதான அஹானா. தனது பெற்றோருடன் வசித்து வரும் இந்த சிறுமி, தெல்லாப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் நடந்த தேர்வில், இவர் கணித பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளார். இதனால், சிறுமியின் பெற்றோர் தங்களது அடுக்குமாடி குடியிருப்பிலேயே கணித பாடத்துக்கு டியூஷன் சேர்த்துள்ளனர்.
இதையடுத்து, சிறுமி அஹானா தினமும் மாலை 1 மணி நேரம் கணக்கு டியூஷனுக்கு சென்று வந்துள்ளார். மாலையில் டியுஷன் செல்வதால், அவரால் வழக்கம் போல் விளையாட முடியவில்லை. இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியும், அவர்கள் கண்டுக் கொள்ளவில்லை. இந்நிலையில், வழக்கம் போல் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிறுமி, மாலை 4 மணிக்கு தனக்கு டியூஷன் போகப் பிடிக்கவில்லை எனவும், நண்பர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார்.
தங்களின் மகள் கூறுவதை கண்டுக்கொள்ளாத பெற்றோர், நீ கட்டாயம் டியூஷன் போயே ஆக வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த சிறுமி, டியூஷனுக்கு செல்லாமல், பால்கனிக்கு சென்றுள்ளார். கீழே பலர் நடமாடிக் கொண்டும், விளையாடிக்கொண்டும் இருப்பதை பார்த்த சிறுமி, பால்கனி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்துள்ளார். 15வது மாடியிலிருந்து கீழே குதித்ததில், சிறுமி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சந்தாநகர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம், அறந்தாங்கி அருகே பள்ளி சிறுமி ஒருவர் கணக்கில் குறைவான மதிப்பெண் எடுத்தால் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடித்தக்கது.