திருமணம் செய்ய வற்புறுத்தியதால், நண்பருடன் சேர்ந்து பள்ளி மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பிச்சாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (45). இவரது மனைவி திலகா (37). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த திலகா, தனது 15 வயது மகள் உஷாவுடன் நெல்வாய் கிராமத்தில் வசித்து வருகிறார். உஷா, பெரியபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10ஆம் தேதி வெளியே சென்ற உஷா, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி காலை கொள்ளனூர் ஏரிக்கரையில் சிறுமியின் சடலம் ஒன்று கிடப்பது பற்றி அறிந்த பாதிரிவேடு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுமியின் கழுத்து மற்றும் முகத்தில் காயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டது மாயமான மாணவி உஷா என்பதும், இவர், மூக்கரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிரவீன் (19) என்ற வாலிபரை காதலித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான பிரவீனை பிடிக்க ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே, முக்கரம்பாக்கம் காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த பிரவீன் மற்றும் 17 வயது சிறுவனை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

கைதான பிரவீன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், ”பள்ளிக்கு செல்லும்போது உஷாவுடன் பிரவீனுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் பிரவீன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மாணவி நெருக்கடி கொடுத்துள்ளார். தினமும் உஷா தொல்லை செய்ததால், அவளை தீர்த்துக்கட்ட நண்பனான அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் சேர்ந்து பிரவீன் திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி, திருமணம் செய்வதாக கூறி, கடந்த 10ஆம் தேதி பிரவீன் உஷாவை அழைத்துள்ளார். ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். கடந்த 22ஆம் தேதி இரவு 11 மணிக்கு உல்லாசமாக இருந்துவிட்டு, நண்பரின் துணையுடன் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து, சடலத்தை ஏரியில் வீசிவிட்டு தப்பியுள்ளார்”. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். பின்னர், பிரவீன் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 17 வயது சிறுவன் செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டான்.