தேனி மாவட்டம் கொத்தபட்டியை சேர்ந்த 16 வயது மாணவி, ஆண்டிப்பட்டியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 10ம் வகுப்பு வரை வேறு ஒரு பள்ளியில் படித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த மாணவி நேற்று மதியம் உணவு இடைவெளியில் பள்ளிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். குதித்ததில், மரக்கிளையில் சிக்கிய மாணவிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் இது குறித்து ஆசிரியருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மாணவியை மீட்ட ஆசிரியர்கள், உடனடியாக அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பத்தாம் வகுப்பு வரை தன்னுடன் படித்த மாணவரை இவர் காதலித்ததும் அவர் சில தினங்களுக்கு முன் விபத்தில் சிக்கி தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்துள்ளது.
மேலும், தனது காதலன் விபத்தில் சிக்கியதை அறிந்த மாணவி விரக்தியில் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்தது தெரியவந்துள்ளது. தற்பொழுது இரண்டு பேரும் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காதலனுக்காக தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் ஆண்டிப்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.