கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தில், 37 வயதான பெலிக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர், தனக்கு சொந்தமான நிலத்தில், தர்பூசணி பயிர் செய்துள்ளார். இந்நிலையில், இவர் வசித்து வரும் அதே கிராமத்தில், 11 வயது சிறுமி ஒருவர் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார்.
அப்போது, அங்கு விளைந்து இருந்த தர்பூசணி பழங்களை சிறுமி பார்த்துள்ளார். இதனால், அவருக்கு தர்பூசணி பழத்தை சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர், பெலிக்ஸ் நிலத்தில் பயிர் செய்யப்பட்ட தர்பூசணியை பறித்து சாப்பிட முயன்றுள்ளார். ஆனால் அதை நிலத்தின் உரிமையாளரான பெலிக்ஸ் பார்த்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பெலிக்ஸ், தனது நிலத்தில் உள்ள பழங்களை பறித்த சிறுமியைத் தூக்கிச் சென்று அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி பலத்த காயம் அடைந்துள்ளார். இதையடுத்து, தனது வீட்டிற்க்கு சென்ற சிறுமி, நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறி அழுதுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், உடனடியாக சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தர்பூசணியை பறித்ததற்காக, சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.