வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 480 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் 310 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையிலிருந்து கிழக்கு வட கிழக்கு திசையில் 100 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாமல், வலுவிழந்து நாளை (சனிக்கிழமை) கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கியது. சில பகுதிகளில் தற்போது வரை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, கடலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி,ராமநாதபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Read More: நோட்!. நாளையுடன் முடிவடையும் காலக்கெடு!. டிச.1 முதல் முக்கிய மாற்றங்கள் இதோ!.