மணிப்பூரில் கலவரம் நடைபெற்றதை தொடர்ந்து ஜூன் 15ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் பட்டியலின அந்தஸ்து கோரி போராடி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்குமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மேதேயி சமுக மாணவர் சங்கம் சார்பில் கடந்த 3ஆம் தேதி பேரணி நடைபெற்றது. ஆனால், மேதேயி சமூகத்தினரை பட்டியலின பிரிவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து பேரணியை குறுக்கிட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் வெடித்த வன்முறை மாநிலம் முழுவதும் பரவியது.
இந்தக் கலவரத்தில் இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வர வழைக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், மணிப்பூரில் ஜூன் 15ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மணிப்பூரில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை காரணமாகவே கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.