கோடைக்காலம் தொடங்கினாலே பல வித நோய்களும் வந்துவிடுவது வழக்கம். பொதுவாக நமது வாழ்க்கை முறை இதற்கு முக்கிய காரணம் என்றாலும், அதிக வெப்ப நிலையும் காரணமாக உள்ளது.
வெயிலின் அதிக தாக்கம் காரணமாக சிறுநீர் பாதை தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது சிறுநீர்ப்பையின் எந்தப் பகுதியிலும் ஏற்பட கூடிய தொற்று என்பதால், இதற்கான பாதிப்பு அதிகமாக இருக்கும். பெரும்பாலும் பெண்கள் தான் இந்த வகையான உடல்நலப் பிரச்னைகளுக்கு அதிகளவில் ஆளாவது வழக்கமாக உள்ளது. எனவே, இந்த பதிவில் சிறுநீர் பாதை தொற்று (Urinary Tract Infection – யுடிஐ) பற்றிய விரிவான அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.
கோடைக்கால தொற்று: பொதுவாக சிறுநீர் பாதை தொற்று என்பது கீழ் சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய் மற்றும் சிறுநீரகங்களுக்கு பரவ கூடிய தொற்றாக உள்ளது. வெயில் காலங்களில் இந்த தொற்று பெரும்பாலும் உண்டாகுகிறது. குறிப்பாக வெயிலில் பயணம் செய்யும் போது, உடலில் வெப்ப நிலை அதிகரித்து இந்த அபாயம் வருகிறது. இவற்றுடன் நீரிழப்பு பாதிப்பும் ஏற்படுகிறது. நீரிழப்பு நிலை தான் சிறுநீர் பாதை தொற்றுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
அதாவது, உடலில் நமக்கு நீரிழப்பு ஏற்படும்போது சிறுநீர்ப்பையில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதற்கு உடலில் போதுமான நீர்சத்து இருக்காது.இதனால், பாக்டீரியா மற்றும் கிருமிகளின் வளர்ச்சிக்கு இது வழிவகுக்கிறது. குறிப்பாக எஸ்செரிசியா கோலி என்கிற பாக்டீரியா Escherichia coli (E. coli) இந்த தொற்றுக்கு முக்கிய காரணமாகும். இந்த பாக்டீரியா இயற்கையாகவே நமது வயிற்றில் உள்ள குடல் பகுதியில் காணப்படுகிறது, ஆனால் இவை சிறுநீர்க் குழாயில் நுழைந்தால் பிரச்னையை ஏற்படுகிறது.
சிறுநீர் பாதை தொற்றுக்கான அறிகுறிகள்: ஒருவருக்கு சிறுநீர் பாதை தொற்று உள்ளது என்பதை அறிய அதற்கான அறிகுறிகளை தெரிந்து கொள்வது அவசியம். சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாவது, உடல் சோர்வு, காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அடிவயிற்றில் வலி, சிறுநீர் கழிக்கும் போது மோசமான நாற்றம் வருவது, இடுப்பு அல்லது மலக்குடல் பகுதியில் வலி, சிறுநீரில் ரத்தம் வருதல் ஆகியவை இந்த தொற்றுக்கான முக்கிய அறிகுறிகளாகும்.
மேலும், இது போன்ற சிறுநீர் பாதை தொற்றுக்களில் இருந்து பாதுகாத்து கொள்ள, சரியான மாதவிடாய் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டியது அவசியம். குறிப்பாக சானிட்டரி நாப்கின்களை 5-6 மணி நேரத்திற்கு ஒரு முறையேனும் மாற்றி கொள்வது, மென்சுரல் கப்களை சரியாக சுத்தப்படுத்துவது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது போன்றவற்றை பின்பற்றுவது நல்லது. அதே போன்று, சிறுநீர் வருகிறது என்றால் அப்போதே சென்று விடுவது அவசியம். நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது மோசமான நோய்களுக்கு வழிவகுக்கும். மேலும், காட்டன் போன்ற இலகுவான மெட்டீரியலால் தயாரித்த உள்ளாடைகளை அணிவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Read More: Poonch Attack | விமானப்படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு.!!