பிரேசில் நாட்டில் வசித்து வந்தவர் தான், ரோசங்கலா அல்மேடா தாஸ் சாண்டோஸ் (37). இவர், கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்து விட்டதாக நினைத்து அவரை குடும்ப வழக்கப்படி சவப்பெட்டியில் அடைத்து உறவினர்கள் அடக்கம் செய்தனர். ஆனால், அடக்கம் செய்யப்பட்டு 11 நாட்கள் ஆன பிறகு அவ்வழியாக சென்றவர் கல்லறையிலிருந்து அலறல் சத்தமும், புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து சவப்பெட்டியை தட்டும் சத்தமும் கேட்கிறது என அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, ரோசங்கலாவின் உறவினர்கள் கல்லறையைத் தோண்டி சவப்பெட்டியை வெளியே எடுத்தனர். அப்போது, ரோசங்கலாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது இருந்ததை காட்டிலும் வேறுமாதிரியாக இருந்தது. உடல் திருப்பி இருந்த நிலையில் மூக்கு மற்றும் காதில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு கீழே கிடந்துள்ளது. கைகளிலும் நெற்றியிலும் இரத்தம் கசிந்திருந்தது. சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட ஆணி மேல் நோக்கித் தள்ளப்பட்டு இருந்தது.
ரோசங்கலாவின் உடலில் சூடும் இருந்தது. இதனைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த உறவினர்கள், உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறிது நேரத்திற்கு முன்பு தான் உயிர் பிரிந்துள்ளது என்று கூறியிருக்கின்றனர். இந்நிலையில், ரோசங்கலா உயிரிழந்ததாக தவறுதலாக முடிவு செய்து அவரை அடக்கம் செய்ததை நினைத்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவருக்கு சுயநினைவு வந்ததும், சவப்பெட்டியின் மூடியைக் கையாலும் நெற்றியாலும் முட்டித் திறக்க முயன்றிருக்கலாம். அதனால் தான் அவரின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 11 நாட்களாக ரோசங்கலா சவப்பெட்டிக்குள் இருந்து வெளியேற முயன்று கடைசியில் உயிரிழந்து விட்டார். இது தெரிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தனர்.