சென்னையில் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்து கைதான இடைநிலை ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டனர்.
சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் 3 விதமான கோரிக்கைகளை முன்வைத்தனர். டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க கோரி தகுதி தேர்வு தேர்ச்சி ஆசிரியர்களின் கூட்டமைப்பினரும் போராடி வருகின்றனர். அதேபோல் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்களும் போராட்டம் நடத்தினர். பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. முக்கியமாக, அமைச்சர் அன்பில் மகேஷ் இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால், பேச்சுவார்த்தை எதுவும் பலன் தரவில்லை. தமிழ்நாடு அரசிடம் போதிய நிதி இல்லை. ஆசிரியர்களுக்கு கொடுக்க இவ்வளவு நிதிதான் இருக்கிறது. அந்த நிதியை வைத்தே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அந்த நிதிக்குள் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அவ்வளவு செலவு செய்கிறோம். அந்த நிதிக்கு ஏற்றபடி எவ்வளவு ஒதுக்கீடு செய்ய முடியுமோ அதை ஒதுக்கீடு செய்வோம் என்று தெரிவித்திருந்தார்.
அதோடு நேற்று நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்தன. மற்றொரு பக்கம் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பில், ”பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ரூ.10,000 ஊதியம் பெற்று வரும் நிலையில், அவர்களுக்கு ரூ.2,500 உயர்த்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு ரூ. 10 லட்சத்தில் மருத்துவக் காப்பீடும் வழங்கப்படும். தொழிற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்” என்றார்.
ஆனால், ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்தது, இதனையடுத்து ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்த நிலையில், காலையில் இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் சமுதாய நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த பகுதிநேர சிறப்பாசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் டெட் ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடைநிலை ஆசிரியிர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.