நின்றால் அதிரடி நடந்தால் சரவெடி என தனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைப்பவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். சிறிய தவறு செய்தாலும் கடுமையான தண்டனைகளை வழங்கி தன் மக்களை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்பும் உலகத்தின் பார்வையில் ஒரு சர்வாதிகாரி. அப்படிப்பட்ட அதிபரை பற்றி தென்கொரியா ஒரு அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது.
வடகொரியாவில் 6 மாத கர்ப்பிணி ஒருவருக்கு பொது வழியில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்ன தெரியுமா..? தன் வீட்டில் நடனமாடி கொண்டிருந்தபோது மறைந்த வடகொரிய அதிபரின் புகைப்படத்தை தெரியா தனமாக சுட்டி காட்டிவிட்டாராம். கையை நீட்டும் போது குறுக்கே அவர் படம் இருந்தால் யார் என்ன செய்ய முடியும். ஆனால், அதற்காக அந்த கர்ப்பிணியை பொது வெளியில் வைத்து வடகொரியா அரசு தூக்கிலிட்டுள்ளதாக அடித்துச் சொல்கிறது தென்கொரியா. மனிதர்களை வைத்து ரகசிய பரிசோதனை செய்வது, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை வழங்குவது என வடகொரியாவில் எல்லை மீறி செல்கிறதாம் மனித உரிமை மீறல்கள். அதிலும், அந்நாட்டு சுகாதார ஊழியர்களுக்கு நோயாளிகளை கவனிப்பதை விட மிக முக்கியமான பணி தரப்பட்டுள்ளதாம்.
அதாவது வடகொரியாவில் வளர்ச்சி தடைபட்ட உயரம் குறைவான பெண்களின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு கட்டாய கருப்பை நீக்கம் செய்ய வேண்டுமாம்? அட இப்படியெல்லாம் கூடவா ஒரு அரசு தனது நாட்டு மக்களுக்கு எதிராக செயல்பட முடியும் என்று கோபத்தை தூண்டும் அளவுக்கு அமைந்துள்ளது தென்கொரியா வெளியிட்டுள்ள 450 பக்க அறிக்கை. அதே வடகொரியாவில் 16 முதல் 17 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகள் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர். ஏன் தெரியுமா..? தென் கொரியாவில் இருந்து வெளியான வீடியோவை பார்த்ததும், அபீன் பயன்படுத்தியதும் தான் அவர்கள் செய்த குற்றங்கள். மனிதர்களுக்கு ரகசியமாக தூக்க மாத்திரை கொடுத்து அவர்களை ’மருத்துவமனை 83’ என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று ஏதேதோ மருத்துவ பரிசோதனைகள் செய்வதாகவும் திகிலை கிளப்பியுள்ளது தென்கொரியா. என்னடா வாழ்க்கை இது என அவ்வப்போது நினைத்துக் கொள்பவர்களுக்கெல்லாம் வடகொரியாவில் இருந்து வரும் இப்படிப்பட்ட தகவல்கள் ஆறுதல் அளிக்கின்றனர். ஆம்..!! வடகொரியாவில் பிறக்காமல் போனவர்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தானே..!!